Thursday, 3 March 2011

கம்பளிமேடு சுப்பிரமணியன் படுகொலையையும் பரளிபுதூர் சாதி வெறியாட்டத்தையும் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

கம்பளிமேடு சுப்பிரமணியன் படுகொலையையும்
பரளிபுதூர் சாதி வெறியாட்டத்தையும் கண்டித்து
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

தொல். திருமாவளவன் அறிவிப்பு


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டத்தில் உள்ள பரளிபுதூரில் கடந்த 13ஆம் தேதியன்று சாதி வெறியர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் தலித்துகளின் வீடுகள் மற்றும் உடைமைகள் முழுவதும் எரிக்கப்பட்டுள்ளன. பல இலட்சக் கணக்கான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இலட்சக் கணக்கான மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் எரிந்து போயுள்ளன. மேலும் வீடுகளில் நகை, பணம் போன்றவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களையும், பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச மிதிவண்டிகளையும் எரித்து நாசமாக்கியுள்ளனர்.

ஒரு திருமண விழாவில் எமது கட்சியினர் விளம்பரப் பதாகைகள் வைத்த ஒரே காரணத்திற்காக நத்தம் வட்டத்திலுள்ள பல ஊர்களைச் சேர்ந்த சாதிவெறியர்கள் இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இவ்வளவு கொடூரத்தை அரங்கேற்றியுள்ள உண்மைக் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. நத்தம் வட்டத்தில் தேநீர்க் கடைகளில் இன்னமும் இரட்டைக் குவளை முறை நீடித்து வருகிறது. பரளிபுதூருக்கு வந்து செல்லும் பேருந்துகளில் தலித்துகள் சரிசமமாக உட்கார்ந்து செல்லவும் அனுமதிக்கப்படுவதில்லை.

கலவரத்திற்குக் காரணமான உள்ளூரைச் சேர்ந்த சாதி வெறியர்கள் இன்னமும் சுதந்திரமாகவே நடமாடி வருகிறார்கள். வன்முறை வெறியாட்டத்தில் குடிநீர்த் தொட்டியை உடைத்தும், மின்மாற்றிக் கம்பங்களை தீ வைத்தும் சேதப்படுத்தியுள்ளதால் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள்கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

ஆகவே, தமிழக அரசு நத்தம் பகுதியைத் தீண்டாமைப் பகுதியாக அறிவித்து பேருந்து மற்றும் தேநீர்க் கடைகளில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைக்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளை உடனே கைது செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறைப்படுத்த வேண்டும்.

பரளிபுதூர் சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்தும் கடலூர் மாவட்டம், கம்பளி மேடு சுப்பிரமணியன் படுகொலையைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 04.03.2011 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவண்

(தொல். திருமாவளவன்)

No comments:

Post a Comment